Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

பாலாற்றை பாதுகாக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து - வாணியம்பாடி அருகே விவசாயிகள் போராட்டம் :

அம்பலூர் - எக்ஸ்லாபுரம் தரைப்பாலம் மீது அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருப்பத்தூர்

பாலாற்றை பாதுகாக்க தவறிய அரசு அதிகாரிகளை கண்டித்து வாணியம்பாடி அடுத்த அம்பலூர் தரைப்பாலத்தில் அமர்ந்து விவ சாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால், வாணியம்பாடி சுற்றி யுள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன. ஆந்திர வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றுப் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றுப் பகுதியில் செல்லக்கூடிய நீர் வரத்துக் கால்வாயை மணல் திருடர்கள் சேதப்படுத்தி வருவதால் பாலாற்றில் நீர்வரத்து குறைந்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்றும், பாலாற்றை பாதுகாக்க தவறிய அரசு அதிகாரிகளை கண்டித்து அம்பலூர் - எக்ஸ்லா புரம் செல்லும் பாலாற்று தரைப்பாலத்தில் மண்வெட்டி, கடப்பாறையுடன் அமர்ந்து நேற்று காலை நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக வந்த அரசுப் பேருந்தை விவசாயிகள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘பாலாற்று நீரை நம்பியே வாணியம்பாடி விவசாயிகள் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக பாலாற்றில் மணல் திருட்டு நடக்கிறது. காவல் துறை, வருவாய்த் துறையினர் துணை யுடன் மணல் திருட்டு நடந்து வருகிறது.

தமிழக-ஆந்திர எல்லையில் தொடர் மழை பெய்து வருகிறது. ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையை கடந்து தண்ணீர் வந்தாலும் இங்கு நீர்வரத்து கால்வாயை மணல் திருடர்கள் சேதப்படுத்தியதால் பாலாற்றில் தண்ணீர் வரவில்லை. பாலாற்று நீரை நம்பியுள்ள ஆயிரக் கணக்கான விவசாயிகள் வாழ் வாதாரத்தை இழந்துள்ளோம்.

ஆகவே, மணல் திருட்டை தடுக்க வேண்டும். மணல் திருட்டுக்கு துணைப்போகும் காவல் துறை அதிகாரிகள், வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் பாலாற்றை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

இதைத்தொடர்ந்து, அம்பலூர் காவல் துறையினர், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து விவசாயிகளைசமாதானம் செய்து, மணல் திருட்டை தடுக்கவும் சேதமடைந்த நீர்வரத்துக் கால்வாயை சரி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தனர். அதன்பேரில், விவசாயிகள் தங்களது போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x