

திருச்சி விமானநிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மாநகராட்சி சந்தை மதிப்பின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி விமானநிலைய விரிவாக்கத்துக்காக கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட நத்தமாடிப்பட்டி பகுதி யாகப்பா நகர், சூசை நகர், சவேரியார் நகர், அமுல் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு அரசு வழங்கவுள்ள இழப்பீடு போதாது என்றும், மாநகராட்சி சந்தை மதிப்பின்படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் திருச்சி விமானநிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொன்மலை பகுதிச் செயலாளர் என்.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.தர், சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது: கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு மாநகராட்சி சந்தை மதிப்பின்படி இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கீழக்குறிச்சி- நத்தமாடிப்பட்டியில் இருந்து நகர்ப்புறத்துக்கும், பள்ளி செல்லவும் பயன்படும் நெடுஞ்சாலையை முறையாக அமைத்துத் தர வேண்டும் என்றனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.