Published : 01 Sep 2021 03:18 AM
Last Updated : 01 Sep 2021 03:18 AM

தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆட்சியர் ஆய்வு : 18வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார். படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றஆய்வுக்குப்பின் ஆட்சியர் கூறியதாவது:

தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களின் தகுதிச்சான்று, அவசர கால வழி, தீயணைப்பு கருவி, முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உட்பட 16 இனங்கள்ஆய்வு செய்யப்பட்டன. பள்ளிவாகனங்களில் கேமரா பொருத்திஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும். கரோனா பரவலைத் தடுக்க பள்ளி வாகனத்தில் அடிக்கடி கிருமி நாசினி தெளித்து, சுகாதார முறையில் பராமரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாநகரப்பகுதிகளில் 4 சிறப்புகுழுக்கள், புறநகர்ப் பகுதியில் 9 குழுக்கள் என 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்றுமுன்னேற்பாடு பணிகள் முழுமையாக நடைபெற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்யும். திருநெல்வேலி மாவட்டத்தில் 88 சதவீதம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கியவுடன் முதல் 1 மணி நேரம் கரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவர்களின் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் பள்ளி கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 17 கல்லூரிகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அந்தந்த கல்லூரிகளில் தடுப்பூசிசெலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், முதன்மைக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோவில்பட்டி

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் இன்று (1-ம் தேதி) முதல் செயல்படுகின்றன. தூத்துக்குடி மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல்காசிம் தலைமையில் வட்டவழங்கல் அலுவலர் செல்வகுமார் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்தகிராம நிர்வாக அலுவலர்கள் நேற்றுமுன்தினம் கோவில்பட்டி பகுதியில்உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தனர். கோவில்பட்டி கல்வி அதிகாரி முனியசாமி தலைமையிலான அதிகாரிகளும் அரசு பள்ளிகள், அரசுஉதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

அனுமதி மறுப்பு

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழியபாண்டியன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா, நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரி, கண்காணிப்பாளர் இன்பகுமார் ஆகியோர் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இருக்கைகள், தீயணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி, அவசரகால வழி, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் காப்புச் சான்று மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. மொத்தம், 45 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 4 வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x