

சேலம் ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி அடுத்த நச்சுவாயனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி-லதா தம்பதியின் மகன் சபரி (14). இவர் கடந்த 22-ம் தேதி விளையாடச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பான புகாரின்பேரில், தொளசம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுவனின் தாய் லதா பணிபுரியும் ஜவுளிக் கடை உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் லதாவின் மகனை ஒப்படைக்க ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், சபரியை ஓரிடத்தில் கட்டி வைத்திருப்பது போன்ற வீடியோவையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.
இதை அறிந்த சேலம் எஸ்பி அபிநவ், ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து சிறுவனை தேடினர். மேலும் செல்போன் அழைப்பு மூலம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேலம் சீலநாயக்கன்பட்டி எம்ஜிஆர் நகரில் மரப்பட்டறை நடத்தி வந்த செல்வகுமார் (19) என்பவர் சிறுவனை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார், சிறுவன் சபரியை மீட்டனர்.
குறுக்கு வழியில்...
செல்வகுமார் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க சிறுவனை கடத்தியுள்ளார். சிறுவனின் பெற்றோர் ஏழை என்பது அவருக்கு தெரியவில்லை. மேலும் திருடப்பட்ட இரு செல்போன்களை பயன்படுத்தியுள்ளார்.
சிறுவனுக்கு 4 நாட்களுக்கு மேலாக உணவு எதுவும் வழங்காமல் அடைத்து வைத்துள்ளார். மீட்கப்பட்ட சிறுவனை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.
இக்கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.