Published : 28 Aug 2021 03:15 AM
Last Updated : 28 Aug 2021 03:15 AM

பத்தமடை பாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு :

இந்திய அஞ்சல்துறை சார்பில் தமிழ்நாடு வட்ட அளவிலான புவிசார் குறியீடு பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தின் பத்தமடை பாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருநெல்வேலி

இந்திய அஞ்சல்துறை சார்பில் தமிழ்நாடு வட்ட அளவிலான புவிசார் குறியீடு பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தின் பத்தமடை பாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்தமடை ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பி.ஐடா எபனேசர் ராஜபாய் வரவேற்றார். முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோ. சிவாஜி கணேஷ், சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். பத்தமடை முஸ்லிம் சுன்னத்துவால் ஜமாத் தலைவர் டி.ஏ. மால்கம் அலி பெற்றுக்கொண்டார்.

பத்தமடை பாயானது கோரை புல்லால், கையால் நெய்யப்படுகிறது. பத்தமடை கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இத் தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு நேர்த்தியாக தயாரிக்கப்படும் பாய்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள கைதேர்ந்த வல்லுநர்களால் பாய்கள், அலங்கார பொருட்கள், நகைப்பெட்டி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பத்தமடை பாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதை கவுரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பத்தமடை ராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி செயலர் மற்றும் நிர்வாகி என். சுந்தர சுப்பிரமணியம், அம்பாசமுத்திரம் அஞ்சல்துறை உதவி கண்காணிப்பாளர் பாலாஜி, மக்கள் தொடர்பு அலுவலர் கனகசபாபதி மற்றும் அஞ்சலக ஊழியர்கள் பங்கேற்றனர். உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ். மாரியப்பன் நன்றி கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x