Published : 28 Aug 2021 03:15 AM
Last Updated : 28 Aug 2021 03:15 AM

இலங்கை தமிழர்களுக்கான அரசு திட்டங்களுக்கு சீமான் வரவேற்பு :

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் இலங்கை தமிழர் களுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டங்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்போம்.

இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை அரசு மூட வேண்டும். கியூ பிரிவு காவல்துறையை கலைக்க வேண்டும்.

சிறப்பு முகாம்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்திருந்தார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இலங்கை தமிழர்களுக்காக முதல்வர் அறிவித்த திட்டங்கள் காலதாமதமானது. இருப்பினும் அதனை வரவேற்கிறோம். காங்கிரஸ், பாஜக தலைமையில் அமைந்த அரசுகள் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மறுக்கிறது. ஆனால், திபெத் மக்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.

பெண்களுக்கு இலவச பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது. ரூ.5.70 லட்சம் கோடி கடன் என சொல்லும் அரசு, எப்படி கடனானது என தெரிவிக்க வேண்டும்.

கட்டணம் குறைப்பு செய்யலாம், இலவசம் தேவையில்லை. பள்ளிகள் திறப்பு மூலம் மக்களை சராசரி வாழ்கைக்கு கொண்டுவர அரசு முயற்சிக்கிறது. ஊரடங்கை மக்கள் விரும்பவில்லை.நோயை விட முடக்கம் என்பது மக்களை மிகவும் பாதிக்கிறது. நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக, என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x