Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க - தினசரி 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் : சுகாதார துறையினருக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேசும் ஆட்சியர் அமர் குஷ்வாஹா.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க தினசரி10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி யுள்ளது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், பஜார் பகுதி, காய்கறி மார்க்கெட், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.

இதனால், கடந்த 2 வாரங் களுக்கு முன்பு குறைந்து காணப் பட்ட கரோனா பரவல் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். அதேபோல, நோய் தொற்றின் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார்.

ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (பொது) வில்சன் ராஜசேகர், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, “ திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஜோலார்பேட்டை, மாதனூர் உட்பட சில இடங்களில் மட்டும் கரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று திரும்புபவர்களால் கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதலில் இதை தடுக்க வேண்டும். வெளியூர்களில் இருந்து திரும்பு வோர்கள் அப்பகுதியில் கூடுதலாக மருத்துவ முகாம்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங் களில் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.கரோனா தடுப்பு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதம் விதிப்பதையும் அதிகரிக்க வேண்டும்.

தற்போது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தை விட இது 2 மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், தினசரி 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x