Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM

வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டதால் - தற்காலிக செவிலியர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு : பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை

பேருந்து வசதி கோரி மணப்படை வீடு கிராம மக்களும், (வலது) அடிப்படை வசதிகள் கோரி குன்னத்தூர் கிராம மக்களும், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

`வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என, கூடங்குளம் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரிந்த செவிலியர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

கூடங்குளம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக செவிலியராக 35-க்கும் மேற்பட்டோர் கடந்த மே மாதம் 18-ம் தேதி முதல் பணியாற்றி வந்தோம். கரோனா தொற்று குறைந்து வார்டு மூடப்பட்டதால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 4-ம் தேதி எங்களை வேலையில் இருந்து விடுவித்துவிட்டனர். தற்காலிக வேலை என தெரிந்தும், ஏற்கெனவே பார்த்த வேலையை விட்டுவிட்டு பணியில் சேர்ந்தோம். எங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

மணப்படைவீடு பேருந்து

பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படைவீடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

‘திருநெல்வேலி டவுனில் இருந்து எங்கள் கிராமத்துக்கு தடம் எண் 12-பி என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. தினமும் 8 முறை இயக்கப்பட்ட இந்த பேருந்து, கரோனா ஊரடங்குக்கு பின்னர் தற்போது முறையாக இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்தை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

ஊராட்சி தலைவர் பதவி

புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளர் நெல்சன் அளித்துள்ள மனுவில், ‘கோட்டைக்கருங்குளம் ஊராட்சியின் தலைவர் பதவி, பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுளளது. ஆனால், இப்பகுதியில் பட்டியல் பழங்குடியினர் யாரும் வசிக்கவில்லை. ஆனால், சிலர் மோசடியாக பட்டியல் பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வாங்கி வைத்துள்ளனர். கோட்டைக்கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பெரும்பான்மையாக உள்ள பட்டியலின மக்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

குன்னத்தூரில் வசதியின்மை

பாளையங்கோட்டை ஒன்றியம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ‘குன்னத்தூர் ஊராட்சியில் கழிவுநீர் ஓடைகள், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பல ஆண்டுகளாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. சாலை, கழிவுநீரோடை உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

பட்டா பெயர் மாற்றம்

வள்ளியூரைச் சேர்ந்த காமராஜர் சமூகநலப் பேரவைத் தலைவர் நற்றமிழன் அளித்துள்ள மனுவில், ‘பத்திரப்பதிவின்போது பட்டா உட்பிரிவு கட்டணம், பட்டா பெயர் மாற்ற கட்டணம் ஆகியவற்றை செலுத்திய பிறகும், பட்டா பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தனி கவனம் செலுத்தி, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x