Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM

நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் :

இந்திய தர நிர்ணய ஆணையம் கொண்டுவந்துள்ள ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி, தென்காசி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை 2 மணி நேரம் நகைக்கடைகள் அடைக்கப்பட்டன.

திருநெல்வேலி டவுன் மேல ரத வீதியில் நகை வியாபாரிகள் கோரிக்கை அட்டைகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், கடையநல்லூரிலும் நகை வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “ஏற்கெனவே நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை இடுவதற்கான காலதாமதம் ஆகும் நிலையில், அனைத்து நகைகளுக்கும் 6 இலக்க அடையாள எண் பதிவிட வேண்டும் என்ற உத்தரவால், மேலும் காலதாமதம் அதிகரிக்கும். சிறிய அளவில் தங்க நகை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் கடும் பாதிப்புகளை சந்திப்பார்கள்” என்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் இரண்டரை மணி நேரம் அடைக்கப்பட்டிருந்தன. நகைக்கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் தங்கள் கடை முன்பு, ஹால்மார்க் தனி அடையாள எண் திட்டத்தை எதிர்த்து பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். பின்னர் 11.30 மணிக்கு வழக்கம்போல கடைகளைத் திறந்து வியாபாரத்தை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி தங்கம், வெள்ளி, முத்து, வைரம் நகை வியாபாரிகள் சங்க செயலாளர் தர் கூறும்போது, “தங்க நகைகளுக்கு ஹால்மார்க் திட்டம் செயல்படுத்தப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், அந்த நகைகளுக்கு எச்.யு.ஐ.டி. என்ற தனி அடையாள எண் பதிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிறு நகை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சிறிய கடை மற்றும் தனியாக வீடுகளில் வைத்து நகை செய்யும் தொழிலாளி ஒவ்வொரு நகையாக வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப செய்து கொடுக்கும்போது, ஒவ்வொரு நகையாக அடையாள எண் பெறுவது மிகவும் சிரமம். எனவே, தனி அடையாள எண் பதிவு திட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மீனாட்சிபுரம், கே.பி.ரோடு, மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், கருங்கல், குளச்சல், களியக்காவிளை ஆகிய இடங்களில் உள்ள 700-க்கும் மேற்பட்ட நகைகடைகள் நேற்று காலையில் இருந்து இரண்டரை மணி நேரம் மூடப்பட்டிருந்தன. இதனால் நகை வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x