Published : 23 Aug 2021 03:15 AM
Last Updated : 23 Aug 2021 03:15 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 31-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மருத்துவமனையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் வெகு விரைவாக குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா 3-வது அலையை தடுக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
அதன்படி, மாவட்டம் முழுவதும் 195 ஊராட்சிகளில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் அடுத்த தோக்கியம் ஜெகல் நாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, ‘‘கரோனா 3-வது அலை வராமல் தடுக்க தேவையான நடவடிக் கைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பியவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டு வாரம் முழுவதும் நடந்து வருகிறது. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் இருப்பு உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
சிறப்பு முகாமில் கிராம மக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
விபரீதங்களை தவிர்க்கலாம்...
தடுப்பூசி ஒன்றே நம்மை காக்கும் ஆயுதம் என்பதால் அரசு பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் தொற்றில் இருந்து தப்பிப்பதுடன் பெரும் விபரீதங்களை தவிர்க்கலாம். குறிப்பாக, சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர் தாமாக முன் வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். 3-வது அலை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற் படுத்தும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்து வருவதால் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முகாம் இடத்துக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகள், வயதான வர்கள் யாராவது இருந்தால் அதுபற்றிய தகவல்களை சுகா தாரத்துறையினரிடம் தெரிவித்தால் அவர்கள் வீட்டுக்கு வந்து தடுப்பூசியை செலுத்த தயாராக உள்ளனர்.
வரும் 31-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அரசு வழி காட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி நடந்தால் 3-வது அலை அல்ல எந்த அலையாக இருந்தாலும் அதை நாம் எளிதாக சமாளிக்கலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT