Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பை சரி செய்யும் பணி தீவிரம் : 10 நாட்களுக்குள் பணியை முடிக்க உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் வடிந்ததையடுத்து சீரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறையினர் தொடங்கி உள்ளனர். 10 நாட்களுக்குள் பணியை முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 15-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் பல்வேறு இடங்களில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்ததையடுத்து உடைப்பு ஏற்படாத வகையில் விநாடிக்கு 1000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

எனினும், பல்வேறு இடங்களில் லேசான கசிவு ஏற்பட்டதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு நசியனூர் அருகே மலைப்பாளையம் கிராமத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்ட இடத்தில் மதகு பகுதியில் கடந்த 12-ம் தேதி இரவு லேசான கசிவு ஏற்பட்டது. அந்தக் கசிவு உடனடியாக சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் தண்ணீரின் அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் காலை வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விளைநிலங்களில் புகுந்தது. இதனால் பெரியவிளாமலை ஊராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம், வரவன்காடு, மலைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் நசியனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தூர் பிரதான வீதி, கிழக்கு வீதி ஆகிய பகுதியில் இருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும், 100 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததோடு நெல் மற்றும் மஞ்சள் பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் 62 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் பாதுகாப்பான இடத்தில் 2-வது நாளாக நேற்றும் தங்க வைக்கப்பட்டு வருவாய்துறை சார்பில் உணவு, உடைகள் வழங்கப்பட்டன. வாய்க்காலின் மேல்பகுதியில் ஆங்காங்கே மதகுகள், அவசர கால மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டதையடுத்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் வடிந்தது.

இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறையினர் சீரமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர். இப்பணிகளை 10 நாட்களில் முடிக்க பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தண்ணீர் வெளியேறியதால் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் ஆங்காங்கே பழுதடைந்ததையடுத்து சாலையை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

சேதம் குறித்து ஆய்வு

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பயிர்கள் சேதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மூன்று நாட்களில் சேதமதிப்பு விவரங்கள் கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும், என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x