Published : 22 Aug 2021 03:15 AM
Last Updated : 22 Aug 2021 03:15 AM

தி.மலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக - தவறான தகவல் அளித்து பணிக்கு வரும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் : ஆட்சியர் பா.முருகேஷ் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தாக தவறான தகவல் அளித்து பணிக்கு வரும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என ஆட்சியர் பா.முருகேஷ் எச்சரித் துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை, செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை செயல்பட உள்ளது. இதையொட்டி, பள்ளிகளில் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்திட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்துப் பேசும்போது, “80 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 100 சதவீதம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும். ஒருவர் மூலம் 10 நாட்களில் ஆயிரம் பேருக்கு தொற்று பரவக்கூடும். ஆசிரியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை சுகாதாரத் துறையினர் உதவியுடன் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தவறான தகவல் தந்து விட்டு பணிக்கு வரும் ஆசிரியர்கள், பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் தவறாமல் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வகுப்பறையிலேயே மாண வர்களை மதிய உணவு உட் கொள்ள செய்திட வேண்டும். மரத்தடியில் கூட்டமாக அனுமதிக்கக்கூடாது. மூன்றாவது அலையானது 18 வயதுக்கு குறைவானவர்களை தாக்கக்கூடும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. பள்ளிக்கு வெளியே மற்றும் உள்ளே மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை எடுத்துரைக்க வேண்டும். பெற்றோரும் 100 சதவீதம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் சுற்றுப் பகுதி யில் ஏற்படும் பிரச்சினையை மக்கள் தெரிவிக்க, தொலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டும்.

கூடுதல் பேருந்துகள்

பள்ளி நேரங்களில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகளில் மாணவர்களை அழைத்து வரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படுவதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் உள்ள மாணவர்களை, வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். பள்ளியில் பாட வகுப்புகள் முடிந்து விடுதிக்கு தாமதமாக வரும் மாணவர்கள் குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கவும்.

எச்சில் துப்பக்கூடாது

முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பூபதி பேசும்போது, “பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குடிநீர் தொட்டி, கழிப் பறைகளை சுத்தம் செய்திருக்க வேண்டும். குழாய் மூலம் தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கான வகுப்பு அட்டவணையை தெரிவிக்க வேண்டும். பள்ளி வளாகத் தில் எச்சில் துப்பக்கூடாது. 3 கட்டுப்படுத்தப்பட்ட மண்டல பகுதியில் உள்ள பள்ளிகள் இயங்காது. அந்த பகுதியில் வசிக்கும் மாண வர்களையும் அனுமதிக்கக்கூடாது” என்றார்.

கஞ்சா, குட்கா விற்பனையா?

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பவன்குமார் பேசும்போது, “பள்ளி அருகே மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை குறித்து ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். என்னுடைய 94981-11125 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 1.27 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x