

ஈரோடு மாநகராட்சியில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன், வீட்டுக்கு வீடு வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், சராசரியாக 150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. தொற்று பரவலைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன், வீட்டுக்கு வீடு வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் 10 இயந்திரங்கள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறும். முதல்கட்டமாக நாள்தோறும் 1000 வீடுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படும். வீட்டுவசதித்துறை வீடுகளில் கடந்த மூன்று மாதமாக ஆய்வு நடந்து வருகிறது. இதில் சிதிலமடைந்த வீடுகளை பராமரித்து வாடகை குடியிருப்பாக இருந்தால் வீட்டில் குடியிருந்தவர்களுக்கே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டுவசதி வாரியத்தில் வீட்டை வாங்கியவர்கள், அந்த வீடுகளில் பழுது இருப்பதாகத் தெரிவித்தால், அதனை இடித்து, முறையாக கட்டித்தர சங்கத்தினரிட ம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், கோட்டாட்சியர் பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.