Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM
கீழ்பவானி பாசன நெல் சாகுபடிக்கு, மானிய விலையில் விற்பனை செய்ய 18 ஆயிரம் கிலோ நெல் விதைகள் தயாராக உள்ளது, என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் ஜீவதயாளன் கூறியதாவது:
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த 15-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோபி வட்டாரத்தில் 3500 ஏக்கருக்கும் அதிகமாக நெல் சாகுபடி நடைபெறும். சம்பா பருவ நெல் சாகுபடிக்கு ஏற்ற கால சூழ்நிலையாக உள்ளது.
இதனால், சம்பா பருவத்திற்கு 130 முதல் 140 நாட்கள் கொண்ட மத்திய கால வயது ரகங்கள் ஏற்றவையாகும். இப்பட்டத்திற்கு கோ.ஆர்-49, கோ-50, ஏ.டி.டி-38, ஏ.டி.டி-39, ஏ.டி.டி-50, பவானி, பிபிடி-5204, சம்பா சப் 1, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, விஜிடி 1 மற்றும் ஐஆர்-20 ஆகிய ரகங்கள் தகுந்தவையாகும்.
செம்மை நெல் சாகுபடிக்கு (ஒற்றை நாற்று நடவு) ஏக்கருக்கு 3 கிலோவும், சாதாரண முறைக்கு 20 கிலோவும் விதை நெல் போதுமானதாகும். விவசாயிகள் அரசு சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும்.
விதை நேர்த்தி செய்தல், ஒற்றை நாற்று நடவு முறை, நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் அல்லது பசுந்தாள் உரம் இடுதல், உயிர் உரங்கள் (அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா) பயன்படுத்துதல், நுண்ணூட்டங்கள் பயன்படுத்துதல், வேப்பம் பிண்ணாக்கு இடுதல், சரியான உர மேலாண்மை செய்தல், பயிர் எண்ணிக்கை பராமரித்தல், பூச்சி நோய் மேலாண்மை செய்தல், போன்றவற்றை கடைபிடித்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
கோபி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையம், கூகலூர் கிடங்குகளில் பல்வேறு ரகங்களைச் சேர்ந்த18 ஆயிரத்து 141 கிலோ விதை நெல் மானிய விலையில் விற்பனை செய்ய தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT