

திருச்சி: திருச்சி கோட்டை டாக்கர் சந்து பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான டீத்தூள் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டை போலீஸார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த வீட்டில் பிரபல டீத்தூள் நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட பாக்கெட்டுகளை போலியாக தயார் செய்து, அவற்றில் டீத்தூளை நிரப்பி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான டீத்தூள், பாக்கெட் போடுவதற்கான இயந்திரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து டாக்கர் சாலையைச் சேர்ந்த ஜெபராராம்(40) என்பவரை நேற்று கைது செய்தனர்.