

சேலம் அரசு செவிலியர் கல்லூரியில் 12 மாணவியருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் கடந்த 16-ம்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரிகள் திறக்கப்பட்டன. நேரடி வகுப்புக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்து, நெகடிவ் சான்றிதழுடன் வருபவர்களுக்கே கல்லூரிக்குள் அனுமதி வழங்கப்பட்டது.
மூன்றாம் ஆண்டு செவிலியர் மாணவியர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். அவர்களில் ஒரு மாணவிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவி உள்பட தொடர்பில் இருந்த மாணவியருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 12 மாணவியருக்கு கரோனா இருந்தது தெரியவந்தது. கரோனா பாதிப்படைந்த 12 பேரும் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மாணவிகளுக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 மாணவிகளைத் தவிர மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை, என்றார்.