

காவலர்களுக்கான தேசிய மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பெண் காவலருக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
தேசிய அளவிலான காவலர்களுக்கான மல்யுத்தப் போட்டி ஹரியானா மாநிலம் மதுபன் கர்னலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமைக் காவலர் ரா.அமுதா 81 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
இவருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கியது. இதற்கான காசோலை கடந்த 16-ம் தேதி ஆயுதப்படை கூடுதல் காவல்துறை இயக்குநர் மு.ஜெயந்த் முரளி தலைமைக் காவலர் அமுதாவிற்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.