

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்திலிருந்து பயணியின் லேப்-டாப் பையை லாவகமாக திருடிய வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் பயணி ஒருவரின் லேப்டாப் பையை, ஒருவர் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது.
இச்சம்பவத்தில் லேப்டாப் மற்றும் உடைமைகளை பறிகொடுத்தவர் கோவையை சேர்ந்த ரங்கநாதன் (64) என்பது பின்னர் தெரியவந்தது. கடந்த வாரம் திருநெல்வேலியில் இருந்து தனியார் பேருந்தில் இவர் தூத்துக்குடிக்கு சென்றபோது, இவரது லேப்டாப் திருட்டுபோனது.
ரங்கநாதன் கொடுத்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். லேப்டாப் பையை திருடியது அம்பாசமுத்திரம் அருகே வைராவிகுளம் பொத்தையைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (42) என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. போலீஸார் அவரைத் தேடி வந்தனர். திருநெல்வேலி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளைச்சாமி நேற்று சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.