தேசிய நல்லாசிரியர் விருதுக்கு - மொடக்குறிச்சி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தேர்வு :

தலைமை ஆசிரியை டி.லலிதா
தலைமை ஆசிரியை டி.லலிதா
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதா தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதாவும் ஒருவர்.

ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த தலைமையாசிரியை லலிதா முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியைத் தொடங்கினார். ஆசிரியர் பணியில் 19 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர். கடந்த 2019-ம் ஆண்டு வரை சிவகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்தார்.

2019-ம் ஆண்டு பதவி உயர்வில் சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியை டி.லலிதா கூறியதாவது:

மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த கல்வியை தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கற்றுக்கொடுத்து வருகிறேன். தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு எளிதாக கற்றுக்கொடுக்க முடியும். தலைமைப் பண்பு குறித்து சர்வதேச அளவிலான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளேன்.

இயற்கை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பாக 160 வீடியோக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்து வைத்துள்ளேன். இயற்கை சூழலில் வீடு ஒன்றை கட்டுவதற்கான மாதிரியை தயார் செய்து வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைமையாசிரியைக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சக ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in