Published : 19 Aug 2021 03:13 AM
Last Updated : 19 Aug 2021 03:13 AM
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பேரூராட்சி தோப்புத் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, சிதம்பராபுரம், சீவலப்பேரி ஊராட்சி படலையார்குளம் ஆகிய பகுதிகளில் மஞ்சள்காமாலை நோய் தாக்கம் அதிகமுள்ளது. அங்கு சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணுவின் உத்தரவின்படி, இப்பகுதிகளில் தினமும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிறுநீர், ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று நோய் கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறார்கள். மாவட்ட துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மற்றும் மாவட்ட மலேரியா அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தினசரி குடிநீரில் குளோரின் அளவை ஆய்வு செய்து வருகிறார்கள். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில், குளோரினேசன் செய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப் படுகிறது.
டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரை பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். காய்ச்சல், வயிற்று வலி அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் அருகிலுள்ள மருத்துவ முகாம்களுக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் நேரில் சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT