

வெங்காயம் அறுவடைக் காலம் தொடங்கியுள்ளதால், சேலம் சந்தைக்கு வரத்து அதிகரித்து சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
வெங்காயம் அறுவடை தற்போது தொடங்கி உள்ளது. இதையடுத்து, சேலத்தில் வெங்காயம் மொத்த விற்பனை அதிகமாக நடைபெறும் லீ பஜார், பால் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் குறைந்துள்ளது.
இதுதொடர்பாக வெங்காயம் மொத்த விற்பனை வியாபாரி ஆனந்த் கூறியதாவது:
சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா ஆகியஅண்டை மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கியுள்ளது.
இதனால், சந்தையில் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. அறுவடைக் காலத்துக்கு முன்னர் சேலம் மார்க்கெட்டுக்கு நாளொன்று 500 மூட்டை வெங்காயம் வரத்து இருந்தது. அப்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது.தற்போது, நாளொன்றுக்கு 1,500 முதல் 2,000 மூட்டை வரை வரத்தொடங்கியுள்ளது. விலை கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனையாகிறது.
இதேபோல, பெரிய வெங்காயமும் அதிகளவில் வருகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல், கர்நாடக மாநிலம் தறிக்கரை, சித்தரதுர்க்கா உள்ளிட்ட இடங்களில் இருந்து வெங்காய மூட்டைகள் சேலம் கொண்டு வரப்படுகின்றன.
தற்போது, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருப்பதால், சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் கிலோ ரூ.30-க்கும் அதிகமாக இருந்த பெரிய வெங்காயம் தற்போது, கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. ஆந்திர மாநில வெங்காயம் கிலோ ரூ.15 முதல் ரூ.18 வரை விற்பனையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.