மஞ்சள் மின்னணு ஏலத்தை ஈரோடு ஆட்சியர் ஆய்வு : உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையத்தில் அமைந்துள்ள ஈரோடு விற்பனைக்குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடக்கும் மஞ்சள் மின்னணு ஏலமுறையை மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ஆதார் மற்றும் வங்கி புத்தக நகல் மூலம் இதுவரை 9227 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் மஞ்சள் மூட்டைகளை 365 நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் மாதிரி மஞ்சளைக் கொண்டு வியாபாரிகள் ஏலம் கோர அனுமதிக்கப்படுகிறது.
இதில், குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்ய விருப்பம் இல்லையெனில், அதனை ரத்து செய்துகொள்ள விவசாயிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. மஞ்சளை விற்பனை செய்த விவசாயிக்கு மின்னணு முறையில் வங்கிக் கணக்கிற்கு தொகை பரிமாற்றம் செய்யப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை நடந்த மஞ்சள் மின்னணு ஏலத்தில் 18 ஆயிரத்து 96 விவசாயிகளுக்கு ரூ.226 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, விற்பனைக் கூடத்தில் அமைந்துள்ள ஏலக்கூடம், உலர்களம், மஞ்சள் தரம் பிரிக்கும் இயந்திரம், மஞ்சள் வேகவைக்கும் இயந்திரம் மற்றும் விவசாயிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள 4114 மெ.டன் மஞ்சள் மூட்டைகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மஞ்சள் ஏலத்திற்காக வந்திருந்த கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதி விவசாயிகள் தங்களது விளைநிலங்கள் அருகே உலர்களம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். கிடங்கிற்கு முன்புறம் படிக்கட்டிற்கு மாற்றாக, சாய்வுதளம் அமைத்து தர சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு அளித்தனர். ஆய்வின்போது, ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி உள் ளிட்டோர் உடன் இருந்தனர்.
