

மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில் மனநல மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. மாவட்ட மனநல திட்டத்தின் மருத்துவர் வ.முகிலரசி தலைமை வகித்துப் பேசியதாவது:
பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களுக்கும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அளவிற்கதிகமான பயம், பதற்றம், மன அழுத்தமும் இதனால் ஏற்படுகின்றன. பொதுவாக எதிர்பார்ப்பும், எதிர்பார்ப்புக்கு ஏற்ற தயார் நிலையில் இல்லாத போதும்தான் பதற்றம் உருவாகிறது.
தற்கொலை என்பது ஒரு மனிதன் வாழ்கையில் ஏற்படும் ஏமாற்றங்களை தாங்க முடியாமல், போராட்டங்களை எதிர்த்து போராட முடியாமல் தன்னை முடித்துக் கொள்வதுதான் தற்கொலை. மனம் பாதிக்கப்பட்டு இருக்கும் போது சிந்திக்கும் ஆற்றல் குறைந்துவிடும். தற்கொலை எண்ணத்தை ஒரு நோயாக கருதி சிகிச்சை எடுத்துக்கொண்டால் விலை மதிக்க முடியாத உயிரைக் காப்பாற்றலாம்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட மனநலத்திட்ட உளவியலாளர் அர்ச்சனா மற்றும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.