Published : 13 Aug 2021 03:17 AM
Last Updated : 13 Aug 2021 03:17 AM

நறுமணப்புல்லில் சீமாறு தயாரிக்க மலைக்கிராம பெண்களுக்கு பயிற்சி : மகளிர் திட்டம் மூலம் விற்கவும் நடவடிக்கை

தாளவாடியை அடுத்த ராமரணை மலைக்கிராமத்தில் சீமாறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர்.

ஈரோடு

தாளவாடி மலைக்கிராம மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, நறுமணப்புற்களைக் கொண்டு சீமாறு தயாரிக்கும் பயிற்சி அளித்து, அவற்றை வாங்கி விற்பனை செய்யும் திட்டத்தை, ஈரோடு மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ராமரணை மலைக்கிராமத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 67 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். வனத்தில் கிடைக்கும் சிறு வனப்பொருட்கள் மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்டு இவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இக்கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், வளங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மகளிர் திட்ட இணை இயக்குநருக்கு, ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழுவினர் இக்கிராமத்தில் ஆய்வு நடத்தினர். அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள், வனப்பகுதியில் விளையும் ஒரு வகை நறுமணப்புல்லை பறித்து, சூரிய ஒளியில் நன்கு உலர்த்தி, ஒரு கிலோ ரூ.20 வீதம் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதை அறிந்தனர். சீமாறு தயாரிக்கப் பயன்படும் இந்த புல்லினை, சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் ஆகிய பகுதிகளில் ஒரு கிலோ ரூ.60 வரை விற்று இடைத்தரகர்கள் லாபம் ஈட்டுவது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ராமரணை கிராம மகளிர் சுய உதவிக்குழுவின் 17 உறுப்பினர்களுக்கு, துடைப்பம் தயாரிக்கும் நபர்களைக் கொண்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. இதன் மூலம் இக்கிராம பழங்குடியின மக்கள் தினமும், துடைப்பங்களைத் தயாரித்து, அதன் மூலம் ரூ.1000 வரை சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். இத்தொழிலுக்காக மகளிர் திட்டத்தின் மூலம் ரூ.75 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ராமரணை கிராம மகளிர் சுய உதவிக்குழு தயாரிக்கும் துடைப்பத்தை மகளிர் திட்டத்தின் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச்சங்கத்தின் மூலம் சந்தைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஆசனூர், கேர்மாளம், திங்களூர் ஆகிய 3 ஊராட்சிகளைச் சேர்ந்த 8 பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x