

சேலம் செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் இன்று (12-ம் தேதி) சிறுபான்மையினர் கடனுதவி பெற சிறப்பு முகாம் நடக்கவுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கல்விக் கடன், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் இன்று (12-ம் தேதி) நடக்கவுள்ளது.
மேலும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தம்மம்பட்டி கிளையில் வரும் 18-ம் தேதியும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஓமலூர் கிளையில் 25-ம் தேதியும், அம்மாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி கிளையில் செப்டம்பர் 2-ம் தேதியும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சங்ககிரி கிளையில் செப்டம்பர் 8-ம் தேதியும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆத்தூர் கிளையில் செப்டம்பர் 14-ம் தேதியும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாழப்பாடி கிளையில் செப்டம்பர் 16-ம் தேதியும் முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) சிறப்பு முகாம்களில் கலந்துக் கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்கலாம்.
கடன் மனுக்களுடன் மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.