வனவிலங்கு வேட்டையை தடுக்க தீவிர நடவடிக்கை : வனப்பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

வனவிலங்கு வேட்டையை தடுக்க தீவிர நடவடிக்கை :  வனப்பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு
Updated on
1 min read

சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபடுபவர்களை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மற்றும் கூட்டு ரோந்துப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, மேட்டூர், ஆத்தூர், சேர்வராயன் வடக்கு, தம்மம்பட்டி, கல்வராயன், கருமந்துறை உள்ளிட்ட வனச்சரகங்கள் அடர்ந்த காப்புக்காடுகளை உள்ளடக்கியது.

குறிப்பாக, ஏற்காடு, சேர்வராயன் தெற்கு, மேட்டூர், வாழப்பாடி, டேனிஷ்பேட்டை உள்ளிட்ட சரகங்கள் மலைப்பகுதிகளையும் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், வெளி நபர்கள் உள்ளிட்டோர் அவ்வப்போது, வனவிலங்கு வேட்டைக்கு செல்கின்றனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் வனப்பகுதிகளில் வன விலங்கு வேட்டை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்டவைகளில் பலர் ஈடுபட்டு வந்தனர்.

இதை தடுக்க வனத்துறையினர், போலீஸாருடன் இணைந்தும் தீவிர ரோந்து சென்றனர். இந்நிலையில், வனப்பகுதிகளில் வேட்டைக்குச் செல்பவர்களைத் தடுக்க, அனைத்து வனச்சரகங்களிலும் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் முருகன் கூறியதாவது:

அனைத்து வனச்சரகங்களில் வாரத்தில் 3 முறை இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. இதில், வனச்சரகர் தலைமையில் வன ஊழியர்கள் ஒன்றிணைந்து ரோந்து சென்று வருகின்றனர். மேலும், வாரம் ஒருமுறை ஏதேனும் ஒரு வனச்சரகத்தில் அனைத்து வனச்சரக ஊழியர்களும் இணைந்து கூட்டு ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். தவிர, அடர் வனப்பகுதி, சந்தேகப்படும் இடங்களில் வனத்துறையின் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in