Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

நகரையொட்டிய ஊராட்சிகளில் - உணவுக் கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் அமைக்கப்படும் : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

‘‘நகர்ப்புறங்களை ஒட்டிய ஊராட்சிகளில் உணவுக்கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்,’’ என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் ரூ.66 லட்சத்தில் அமைக்கப்பட்ட உணவுக் கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அவர் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். தமிழரசி எம்எல்ஏ, ஊராட்சித் தலைவர் மணிமுத்து முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் பேசியதாவது: இந்த ஆலை மூலம் நாள் ஒன்றுக்கு 2 டன் உணவுக் கழிவுகளில் இருந்து 200 கிலா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கான உணவுக்கழிவுகள் காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும்.

இந்த மின்சாரம் முழுவதும் காஞ்சிரங்கால் ஊராட்சி தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஊராட்சி நிர்வாகத்துக்கு மின் கட்டணம் குறையும். இதில் கிடைக்கும் கழிவுகள் உரங்களாக மாற்றப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும்.

கடந்த காலங்களில் இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டன் அளவுக்கு ஆலை அமைக்க ரூ.1 கோடி தேவைப்பட்டது. தற்போது அது ரூ.33 லட்சமாகக் குறைந்துள்ளது. மேலும் அது குறைய வாய்ப்புள்ளது. இதனால் நகர்ப்புறங்களையொட்டிய ஊராட்சிகளில் இதுபோன்ற ஆலைகள் அதிகளவில் அமைக்கப்படும். இதன்மூலம் சுகாதாரக்கேடு குறைக்கப்படும், என்றார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். ஊரகவளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வீரபத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x