வெளிமாநில பயணிகளுக்கு : ஈரோடு ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை :

வெளிமாநில பயணிகளுக்கு : ஈரோடு ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை :

Published on

வெளி மாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ரயில் பயணிகளுக்கு, ரயில் நிலையத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளிலும், சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தினமும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள், ஈரோடு வழியாக சென்று வருகின்றன. ஈரோட்டுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்களும் ரயில்கள் மூலம் ஈரோடுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் மூலம் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு ஈரோடு ரயில் நிலையத்தில் சுகாதாரத்துறை, மாநகராட்சி, ரயில்வே நிர்வாகம் சார்பில் முகாம் அமைத்து, கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in