அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் - கோயில்களில் மக்கள் வழிபட, புனித நீராட தடை : ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு பொதுமக்கள் சென்று வழிபடவும் மற்றும் நீர் நிலைகளில் புனித நீராடவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி ஆடி அமாவாசையான இன்று (8-ம் தேதி), 11-ம் தேதி ஆடிப்பூரம், 13-ம் தேதி ஆடி வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கும் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் சென்று தரிசனம் செய்யவும், நீர் நிலைகளில் புனிதநீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பண்ணாரி அம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில், அந்தியூர் பத்ரகாளியம்மன், சக்தி வேணுகோபால சுவாமி, தலையநல்லூர் பொன் காளியம்மன், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி, பவளமலை முத்துக்குமார சுவாமி, தம்பிக்கலை அய்யன், கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றீஸ்வரர், நஞ்சை காலமங்கலம் கல்யாண வரதராஜப் பெருமாள், நாகேஸ்வரர் குலவிளக்கம்மன், வைரா பாளையம் சோழீஸ்வரர், காஞ்சிக்கோவில் சீதேவியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்,ஈரோடு பெரிய மாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோயில், கொங்கலம்மன் கோயில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் ஆகிய கோயில்களில் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு, காரணம்பாளையம் அணைக்கட்டு, கொடிவேரி அணைக்கட்டு, பவானிசாகர் அணை பகுதியிலும் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி இல்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
