

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சனிக்கிழமை ஏற்காட்டுக்கு செல்ல முயன்றவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா பரவலை தடுக்க ஏற்காட்டுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரத்தின் மற்ற நாட்களில் ஏற்காடு செல்வோர் இரண்டு தவணைகரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை பயணிகளுக்கு தடையை தொடர்ந்து, ஏற்காடு அடிவாரத்தில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலை மீது செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தடையை மீறி நேற்று காலை முதல் இருசக்கர வாகனம், கார்களில் ஏராளமான பயணிகள் ஏற்காடு செல்ல முயன்றனர். அவர்களை மலை அடிவாரத்தில் தடுத்து நிறுத்திய போலீஸார் திருப்பி அனுப்பினர். மேலும், சுகாதாரத்துறையினர் மூலம் தடையை மீறி ஏற்காடு செல்ல முயன்றவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பயணிகளுக்கு தடை என்பதால், தொடர்ந்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.