

திருச்சி மன்னார்புரத்தில் ‘எல்பின் இ-காம்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான சு.ராஜா, அறம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துவரும் நிலையில், அதுதொடர்பாக வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்த பொறியாளர் மிதுன் சமேஷ்(28) என்பவர் கடந்த மாதம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதத்துக்குள் 3 மடங்காக திருப்பித் தருவதாக கூறியதை நம்பி, நான் ரூ. 72.82 லட்சமும், எனது உறவினர்கள் ரூ.2.18 கோடியும் முதலீடு செய்தோம்.
ஆனால் பலமுறை நேரில் சென்று கேட்ட பிறகும் பணத்தை திருப்பித் தராமல். அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து ராஜா, அவரது தம்பி ரமேஷ் மற்றும் 8 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.