Published : 07 Aug 2021 03:19 AM
Last Updated : 07 Aug 2021 03:19 AM
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.
பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத் துடனும், அவர்களை ஆக்கப்பூர்வ மான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி மைலாறு, சேர்வலாறு, அகஸ்தியர் குடியிருப்பு காணி பழங்குடி மக்களை சீருடைப் பணி, வனப்பணி உள்ளிட்ட பிற அரசு பணிகளிலும், வங்கிப் பணி போன்ற இதரப் பணிகளில் சேர்க்கும் பொருட்டு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கடந்த 27-ம் தேதி முதல் முண்டந்துறை வன அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்கள் அரசு அலுவலக செயல்பாடுகள், அதன் பணி இயல்பு போன்றவற்றை கண்டுணர்ந்து அவர்கள் அப்பணியில் சேர ஆர்வத்தை உருவாக்கும் வகையில் ஒரு நாள் சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முதற்கட்டமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் துக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணி வண்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியருடன் கலந்துரையாடினர். வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அ. ஜோதிமணி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சுற்றுச்சூழல் மேம்பாட்டு அலுவலர் கணேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வே. தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT