Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM

தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும் : அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில்,‘மக்களைத் தேடி மருத்துவம்‌’ திட்டத்தினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தாளவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே 5 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது, கூடுதல் மருத்துவ வசதிகள் கிடைக்கும். தாளவாடி சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவச் சிகிச்சைக்காக, சமவெளிப்பகுதிக்குச் செல்லாமல், இங்கேயே சிகிச்சை பெற முடியும்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் முதல்கட்டமாக தாளவாடி வட்டாரத்திலும்‌, அதனைத்‌ தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில்‌ அனைத்து வட்டாரங்களிலும்‌ படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்‌ கீழ்‌ தாளவாடி வட்டாரத்தில்‌ முதல்கட்டமாக 1409 பயனாளிகள்‌ பயன்‌பெறவுள்ளனர்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அமைச்சர் முத்துசாமி நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, எம்பி அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் கோபி கோட்டாட்சியர் பழனிதேவி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள், வட்டாட்சியர் உமா மகேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x