

ஈரோட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடன் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், ஆணையர் இளங்கோவன் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆணையர் பேசியதாவது:
மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் பெரிய கடைகளில் கைகளைக் கழுவ, சோப்பு மற்றும் தண்ணீர் கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். சிறிய கடைகளில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டும், ஒரே நேரத்தில் அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர் முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால், உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், வாடிக்கையாளர்கள் போனில் தங்களுக்குத் தேவையான இறைச்சி குறித்து முன்கூட்டியே தெரிவிக்கும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இறைச்சிக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் சேராமல், உடனுக்குடன் இறைச்சி வாங்கிச்செல்ல இம்முறை உதவியாக இருக்கும் என அதிகாரிகள் கூட்டத்தில் அறிவுறுத்தினர்.