Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவல் அச்சம் காரணமாக இவ்வாண்டு ஆடிப்பெருக்கு களையிழந்திருந்தது.
ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளில் தாமிரபரணி படித்துறைகளில் பெண்கள் திரண்டு, தாமிரபரணி தாய்க்கு ஆரத்தி எடுத்து, மலர்கள் தூவி வழிபாடு செய்வார்கள். திருமாங்கல்யக் கயிற்றை பிரித்து கட்டும் நிகழ்வும் நடைபெறும்.
ஆனால், கரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா களைகட்டவில்லை. இவ்வாண்டும் நேற்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்ட நிலையில், மக்கள் ஆற்றங்கரைகளில் கூடவும், பூஜைகள் செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. இதனால், பெண்கள் பலரும் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று வழிபாடுகளை மேற் கொள்ளவில்லை. வீட்டிலேயே பூஜைகளில் ஈடுபட்டனர்.
வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோயில் மற்றும் குறுக்குத்துறை முருகன் கோயில்களில் குறைந்த அளவில் வந்த பெண்கள் பூஜைகளைச் செய்தனர். ஆற்றங்கரைக்கு வந்திருந்த தம்பதியர் சிலர் பூஜைகளை செய்து, தாலியைப் பிரித்துக் கட்டும் சடங்கை நிறைவேற்றினர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி ப்பெருக்கான நேற்று அம்மன் கோயில்களில் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆடிப்பெருக்கு , ஆடி அமாவாசை உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களில் கோயில்கள், தாமிரபரணி ஆற்று உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை தினத்தன்று பலி தர்ப்பணத்துக்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடிப் பெருக்கு தினமான நேற்று குமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில்களின் முகப்பு வாயில் அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், ஆரல்வாய்மொழி அவ்வையாரம்மன் கோயில் மற்றும் நகர, கிராமப்புறங்களில் உள்ள கோயில்களுக்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT