தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிப்பால் - ஏற்காட்டில் விதிமீறுவோருக்கு கரோனா பரிசோதனை : விழிப்புணர்வு பணியும் தீவிரம்

ஏற்காடு அண்ணா பூங்கா அருகே சுற்றுலா வாகனத்தில் வந்த பயணிகளிடம் கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த சுகாதாரத் துறையினர்.
ஏற்காடு அண்ணா பூங்கா அருகே சுற்றுலா வாகனத்தில் வந்த பயணிகளிடம் கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த சுகாதாரத் துறையினர்.
Updated on
1 min read

சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஏற்காட்டில் கரோனா வழிகாட்டுதல் நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறும்பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சேலம், சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும்ஏற்காடு சுற்றுலா தலத்திலும் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட தோட்டக்கலைத்துறைப் பூங்காக்கள், ஏற்காடு படகு இல்லம் ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்காட்டில் தற்போது நிலவும் இதமான சீதோஷ்ணநிலை மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் விடுமுறை நாட்களில் ஏற்காடு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஞாயிறு விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் பக்கோடா பாயின்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. இதனால், ஏற்காட்டில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், ஏற்காட்டில் கரோனா தடுப்பு விதிகளை மீறும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்வது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஏற்காடு ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸார் இணைந்து பயணிகளுக்கு, தொற்றுப் பரவலைத் தடுக்க துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போலீஸார் ரோந்து சென்று, ஒலிபெருக்கி மூலம் பயணிகள் கூட்டமாக நிற்கும் இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர்.

கார்களில் 4 பேருக்கு மேல் இருந்தால் அவர்களுக்கும், கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கும் கரோனா பரிசோதனைசெய்யப்படுகிறது. மேலும் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்களுக்கும் அபராதம்விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, “ஏற்காடு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை 100 முதல் 120 எண்ணிக்கை அளவுக்கு நடத்தப்பட்டு வந்தது. தற்போது, பரிசோதனை எண்ணிக்கை 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வருபவர்களை தீவிரமாக கண்காணித்து அபராதம் வசூலிக்கப்படுகிறது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in