

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக, ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுதினம் நாளை (3-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அரசு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் ஓடாநிலையில் ஒன்றுகூடி, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தீரன் சின்னமலை நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த, அவர்களின் வாரிசுதார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சித்தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற அமைப்புகள், சங்கம் ஆகியோர் கூட்டமாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. ஒரு நேரத்தில் 5 நபர்கள் வீதம் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும், தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அரசியல் கட்சிகள், பிறஅமைப்புகள் தங்களது கொடிகளையோ, தோரணங்களையோ அல்லது விளம்பர தட்டிகளையோ வைக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை