உப்பிலியபுரம் அருகே 2 பேரை தாக்கிவிட்டு - கரடுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை வனப் பகுதிக்குள் சென்றது : மீண்டும் வர வாய்ப்பில்லை என மாவட்ட வன அலுவலர் தகவல்

ஆங்கியம் கரடுப் பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற சிறுத்தை. (அடுத்த படம்) ஈரமான வயல் பகுதியில் பதிவாகியிருந்த சிறுத்தையின் கால்தடம்.
ஆங்கியம் கரடுப் பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற சிறுத்தை. (அடுத்த படம்) ஈரமான வயல் பகுதியில் பதிவாகியிருந்த சிறுத்தையின் கால்தடம்.
Updated on
1 min read

உப்பிலியபுரம் அருகே 2 பேரை தாக்கிவிட்டு, கரடுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை கொல்லிமலை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. அது மீண்டும் வர வாய்ப்பில்லை என மாவட்ட வன அலுவலர் சுஜாதா தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே ஆங்கியம் கிராமத்தில் உள்ள கரடு பகுதிக்குள் சிறுத்தை உறுமும் சத்தம் நேற்று முன்தினம் கேட்டுள்ளது. இதையறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் அங்கு சென்று கரடுப் பகுதிக்குள் சிறுத்தை பதுங்கியுள்ளதா எனத் தேடியுள்ளனர். அப்போது ஆங்கியம் கிராமத்தைச் சேர்ந்த மனோகர் மகன் ஹரிபாஸ்கர் (20), துரைசாமி (60) ஆகியோரை சிறுத்தை தாக்கிவிட்டு, மீண்டும் கரடு பகுதிக்குள் சென்றுவிட்டது.

தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் சுஜாதா மற்றும் வனத் துறையினர் உடனடியாக அங்கு சென்று பார்வையிட்டனர். முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் இரவு ஆங்கியம், அழகாபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வீடுகளை விட்டு வௌியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது. விடிய விடிய வனத் துறையினர் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர். கரடு பகுதியில் ஆங்காங்கே கேமராக்களைப் பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிப்பு மேற்கொண்டனர். அதில் கரடு பகுதியிலிருந்து சிறுத்தை வெளியேறிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா கூறும்போது, ‘பொதுமக்கள் வசிக்கும் பகுதி களில் பெரும்பாலும் பகல் நேரத்தில் நடமாட சிறுத்தைகள் தயங்கும். எனவே, இரவில் நிச்சயம் அதன் நடமாட்டம் இருக்கும் என நினைத்து 4 இடங்களில் கேமராக் களை பொருத்திக் கண்காணித் தோம். அதன்படி, ஒரு ஆண் சிறுத்தை இரவு நேரத்தில் கரடுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்சிகள், அங்குள்ள ஒரு கேமராவில் பதிவாகியிருந்தன. அதைத்தொடர்ந்து 4 கி.மீ தொலைவு வரை சென்று ஆய்வு செய்தோம். அப்போது, அங்குள்ள ஈரமான வயல்வெளிப் பகுதிகளில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது. நாமக்கல் மாவட்டத்தை ஒட்டிய கொல்லிமலை பகுதிக்குள் அந்த சிறுத்தை சென்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி மீண்டும் இப்பகுதிக்கு வர வாய்ப்பில்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். எனினும், தொடர்ந்து அப்பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in