Published : 02 Aug 2021 03:17 AM
Last Updated : 02 Aug 2021 03:17 AM

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் - கரோனா பரவல் தடுப்பு ஒரு வார விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம் :

திருச்சி மாவட்டத்தில் ஒரு வார கால கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று தொடங்கியது.

ஆக.7-ம் தேதி வரை நடை பெறவுள்ள இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே ஆட்சியர் சு.சிவராசு தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஆட்சியர் தலைமையில் மருத்து வர்கள், சுகாதாரத் துறையினர், பொது மக்கள் உள்ளிட்டோர் கரோனா பரவல் தடுப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, விழிப்பு ணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும், முகக் கவசங்களையும் பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலி னால் வெளியிடப்பட்ட கரோனா விழிப்புணர்வு வீடியோ காட்சி களை மக்களிடையே திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில், செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தைக் கொடிய சைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையில், முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளி யைக் கடைபிடிப்பதும் குறைந்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி இட்டுக்கொள்ள வேண் டும். திருச்சி மாவட்டத்தில் தற் போது தினமும் 4,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் நிலையில், இனி தினமும் 6 ஆயி ரம் பேருக்கு பரிசோதனை செய் யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ், கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் செல்வபாலாஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கரூரில்...

கரோனா ஒருவார விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று கரூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு உறுதி மொழியேற்றார்.

‘கரோனா இல்லா கரூர்' என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கப் பதாகையில் ஆட்சியர், அரசு அலுவலர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கையெழுத் திட்டனர். பின்னர், ஆட்சியர் கூறியது: கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (ஆக. 2) கரூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளுவர் மைதானம் வரை கரோனா விழிப்புணர்வு வாகனப் பேரணியும், கைகழுவும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், நிலமெடுப்பு சிறப்பு வருவாய் அலுவலர் கவிதா, கரூர் கோட்டாட்சியர் என்.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில், ஆட்சியர் ப. வெங்கடபிரியா நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், ஆட்சியர் உறுதிமொழி வாசிக்க அவரைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அரியலூரில்...

அரியலூர் பேருந்து நிலையத் தில் சுகாதாரத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் கரோனா விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சி.ஹேமசந்த் காந்தி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூரில்...

தஞ்சாவூரில் நேற்று கீழவாசல் பகுதியில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா 3-வது அலை பரவல் ஏற்பட்டால், உரிய சிகிச்சை அளிக்க வசதியாக அரசு மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 700 படுக்கைகள் உட்பட 2,700 படுக்கைகள் மற்றும் தேவையான அளவு ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் உள்ளன. தேவையான அளவு மருந்துகளும் கையிருப்பில் உள்ளன என்றார்.

இந்நிகழ்வின்போது கூடுதல் ஆட்சியர்கள் என்.ஓ.சுகபுத்ரா, காந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் கோட் டாட்சியர் வேலுமணி, வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக, பொதுமக்கள், வணிகர்களுக்கு கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை ஆட்சியர் ரா.லலிதா நேற்று வழங்கினார்.

பின்னர், ஆட்சியர் கூறியபோது, “கரோனா மூன்றாவது அலை வராத வகையில், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குநர் பிரகாஷ், வர்த்தகர் சங்கத் தலைவர் செந்தில் வேல், ரோட்டரி சங்க துணை ஆளுநர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x