

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கொங்கணாபுரம் கால்நடை சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதெரியாமல், நேற்று சந்தைக்கு வந்த விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் கொங்கணாபுரம் கால்நடை சந்தை கூட அனுமதியளிக்கப் பட்டது.
இதையடுத்து, சந்தை கூடிவந்தது. தற்போது, கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, கொங்கணாபுரத்தில் சனிக்கிழமைகளில் கூடும் கால்நடை சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், நேற்று கொங்கணாபுரம் சந்தை மூடப்பட்டது. இது தெரியாமல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, கோழிகளுடன் சந்தைக்கு திரண்டு வந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தொலை தூரத்தில் இருந்து கால்நடைகளுடன் வந்த வியாபாரிகளில் சிலர் தங்காயூர் சாலை, வெள்ளையம்பாளையம், கோட்டைமேடு, கண்ணந்தேரி சாலை, எடப்பாடி செல்லும் சாலைகளில் நின்று கால்நடைகளை விற்பனை செய்தனர். இதை அறிந்து அங்கு சென்ற அதிகாரிகள் சாலைகளில் நின்று கால்நடைகளை விற்பனை செய்வதை தடுத்தனர். மேலும், சிலருக்கு அபராதம் விதித்தனர்.