Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா 3-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
திருநெல்வேலி புதிய பேருந்துநிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தை மேம்படுத்தும் பணி, தாமிரபரணியில் 22 இடங்களில் சுத்தப்படுத்தும் பணி, திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நடுதல், திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தல், அரசு அருங்காட்சியகத்தில் திறந்தவெளி கலையரங்கம் மற்றும் ஒலி ஒளி காட்சிக் கூடம் திறப்பு, கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
புனரமைக்க ஆலோசனை
திருநெல்வேலி மாவட்டத்தில் 1,237 நீர்நிலைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, அந்தந்த உள்ளாட்சித்துறை கட்டுப்பாடுகளில் இந்தகுளங்கள் இருக்கின்றன. இவற்றை எந்த வகையில் புனரமைப்பு செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கலையரங்கம் மூலம் நமது பகுதி கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். மேலும், அருங்காட்சியகத்துக்கு வரும் மாணவ, மாணவிகள் கடந்த கால வரலாறுகளை ஒலி, ஒளி வடிவில் பார்க்க முடியும். அத்துடன் தமிழகத்தில் இருக்கும் பிற அருங்காட்சியக சிற்பங்களையும் இங்கிருந்தே பார்க்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா 3-வது அலை வந்துவிரும்பத்தகாத சூழல் ஏற்பட்டாலும் மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முழு தயார்நிலையில் இருக்கின்றன. குழந்தைகளுக்கென 200 ஆக்சிஜன்படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் செலுத்தி வருகிறோம்.அத்துடன் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறோம்.
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசுதான் முடிவுசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாப், மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT