

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமப் புற தொழில் மேம்பாட்டுக்காக ‘ஊரக புத்தாக்க திட்டம்’ விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித் தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்து வரும் திட்டப்பணிகளை அத்துறையின் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், அத்தனாவூரில் தனியார் மண் புழு உரம் உற்பத்தி மைய செயல்பாடு, ஜோலார்பேட்டையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பாடு, குடிநீர் திட்டப்பணிகள், நாட்றாம்பள்ளி அடுத்த மல்ல குண்டா ஊராட்சியில் நடந்து வரும் மரக்கன்று வளர்ப்பு, தீவனப் பயிர் உற்பத்தி மற்றும் நீர் உறிஞ்சி குழிகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறையின் செயல் பாடுகள், எதிர்கால திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வரவேற்றார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கோபால், மகளிர் திட்ட மேம்பாட்டு மேலாண்மை இயக்குநர் பல்லவி பல்தேவ் ஆகியோர் திட்ட பணிகள் குறித்து விளக்க உரையாற்றினர்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமை வகித்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் கூறும் போது, ‘‘தமிழகத்தில் கரோனா பேரிடம் காலத்தில் வாழ்வாதா ரத்தை இழந்த கிராமப் புற மக்களின் தொழில் மேம் பாட்டுக்காக அனைத்து மாவட் டங்களிலும் ‘தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்’ செயல்படுத்தப் படுகிறது.
திருப்பத்தூர் புதிய மாவட்ட மாக உருவானதால் இங்கும் அத்திட்டம் படிப்படியாக விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் உயரும். குறிப்பாக, மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.