Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

திருச்சி/ தஞ்சாவூர்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய மண்டலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் சிவசூரியன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் த.இந்திரஜித் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஏ.கே.திராவிடமணி, புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.செல்வராஜ், பொருளாளர் ஆர்.பழனிசாமி, துணைச் செயலாளர் ஜி.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் கர்நாடக அரசு கட்டியுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் எஸ்.சி.சோமையா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், மாநிலக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, கோரிக்கை மனு அளிக்கச் சென்றபோது, ஆட்சியர் இல்லாததால் அலுவலக வாயிலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலரின் செல்போனுக்கு தொடர்புகொண்டு பேசிய ஆட்சியர், விவசாயிகளை சமாதானப்படுத்தியதால், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துவிட்டுச் சென்றனர்.

நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் பாபுஜி, மாவட்டத் தலைவர் சரபோஜி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சம்மந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர் ஜி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் டி.தண்டபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x