ஜோலார்பேட்டை அருகே : ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு :
ஜோலார்பேட்டை அருகே ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ஒன்றியம், அச்சமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு மின் விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி செயலாளரிடம் கடந்த சில மாதங்களாக கோரிக்கை மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காத ஊராட்சி செயலாளர் பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டி வந்ததாக குற்றம் சாட்டப் படுகிறது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் குடிநீர் வழங்க வேண்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்ற பொதுமக்களை, ஊராட்சி செயலாளர் கடுமையாக வசைபாடி அவர்களை வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அச்சமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு நேற்று மாலை பூட்டுப்போட்டு மூடினர். பின்னர், புதுப்பேட்டை - திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம், காவல் ஆய்வாளர்கள் லட்சுமி (ஜோலார்பேட்டை), ஹேமா வதி (திருப்பத்தூர் டவுன்) மற்றும் காவல் துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். பொது மக்களிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஊராட்சி செயலாளர் மீது உரிய விசாரணை நடத்த ஊராட்சிகளின் உதவி இயக்கு நருக்கு பரிந்துரை செய்யப்படும் என காவல் துறை யினர் வாக்குறுதியளித்தனர். இதனையேற்று, பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
