நூதன முறையில் கடன் வாங்கி ரூ.1.50 கோடி மோசடி : பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு எஸ்பியிடம் புகார்

நூதன முறையில் கடன் வாங்கி ரூ.1.50 கோடி மோசடி :  பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு எஸ்பியிடம் புகார்
Updated on
1 min read

நிதி நிறுவனத்தில் நூதன முறையில் கடன் வாங்கி ரூ.1.50 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

கூலித் தொழிலாளர்களான எங்களை கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அணுகி நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கித் தருவதாகக் கூறினார். ரூ.5 லட்சம் கடன் வாங்கி தன்னிடம் முதலீடு செய்தால் அதற்காக மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.50 ஆயிரம் கொடுப்பதாகவும், அதற்கான வட்டியை தானே கட்டி விடுவதாகவும் தெரிவித்தார்.

இதை நம்பி ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் வெற்றுத்தாளில் கையெழுத்திட்டு அவரிடம் கொடுத்தோம். இதன்மூலம் அவர் தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கடன் பெற்றுக் கொண்டு எங்களுக்கு 10 சதவீதம் தொகையை மட்டுமே கொடுத்து வந்தார்.

இரண்டு ஆண்டுகள் அவர் வட்டி கட்டி வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் வட்டி கட்டாததால் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை வட்டி கட்டச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்டவரிடம் கேட்டால் அவர் பதில் ஏதும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்ற எஸ்.பி. சசிமோகன் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in