Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

இந்தியாவுக்கு முதல் பதக்கம் - ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார் மீராபாய் சானு :

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் ஜிஹுய் ஹூ (நடுவில் இருப்பவர்), வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு (இடது) மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தோனேஷியாவின் வின்டி கன்டிகா ஐசா (வலது) ஆகியோர். -பிடிஐ

டோக்கியோ

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கு தல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த் துள்ளார் மீராபாய் சானு.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கள் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கின. இதைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் நேற்று போட்டி கள் நடந்தன. இதில் மகளிருக்கான பளு தூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு, 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மீராபாய் சானு, ஸ்நாட்ச் பிரி வில் 87 கிலோ எடையையும், கிளீன் அன்ட் ஜெர்க்கில் 115 கிலோ எடையையும் தூக்கினார். தன்னுடைய முதல் முயற்சி யில் மீராபாய் சானு 84 கிலோவையும், 2-வது முயற்சியில் 87 கிலோவையும் தூக்கினார். ஆனால், 3-வது முயற்சியில் 89 கிலோவைத் தூக்குவதில் மீராபாய் சானு தோல்வி அடைந்தார்.

சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ எடையை தூக்கி (94 116) புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேஷியாவின் வின்டி கன்டிகா ஐஷா 194 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் மீராபாய் சானு. கடந்த 2000-ம் ஆண்டு சிட்னி யில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஏமாற்றம் அடைந்த மீராபாய் சானு, கடந்த 5 ஆண்டுகளாக கடினமாக பயிற்சிகள் செய்து தற்போது முதல் பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து மீராபாய் சானு தனது ட்விட்டர் பதிவில், ‘உண்மையில் கனவு நனவான தருணம் இது. இந்தப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப் பணிக்கிறேன்.

இந்தப் பயணத்தின்போது உடனிருந்த கோடிக்கணக்கான இந் தியர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. நிறைய தியாகங்களைச் செய்து என் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் அம்மாவுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாழ்த்து

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘மீராபாய் சானுவின் அற்புதமான செயல் திறனால் நாடு மகிழ்ச்சி அடைகிறது. பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் வெளியிட்ட செய்தியில், ‘ஒலிம்பிக் போட்டியில் முதல்நாளிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்ற மீராபாய் சானுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அவரது சாதனை, இந்தியாவில் இருக்கும் விளை யாட்டு வீரர்களை ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும்’ என கூறி யுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒளிமயமான தொடக்கம். தனது அபாரமான செயல் திறனால் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுத் தந்திருக்கும் மீராபாய் சானு வுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்’ என பதிவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன், அபூர்வி சண்டிலா ஆகியோர் பதக்க சுற்றுக்கு முன்னேறத் தவறினர். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி இறுதிச் சுற்றில் 137.4 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

ஹாக்கியில் முதல் வெற்றி

வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்தது. ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி நியூஸிலாந்தை 3 -2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. மகளிர் ஹாக்கியில் இந்தியா 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டது.

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா, சுதிர்தா 2-வது சுற்றுக்கு முன்னேறினர். ஆட வருக்கான ஒற்றையரில் இந்தியாவின் சுமித் நாகல் 2-வது சுற்றுக்கு முன் னேறினார். பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷிராக் ஷெட்டி, சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x