

எலவனாசூர்கோட்டை (பிடாகம்) ஊராட்சியில் பொதுப் பயன் பாட்டிற்கான சுகாதார வளாகத்தை ஆக்கிரமித்து குடியிருப்பாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை ஏரிக்கரை அருகே கிராம மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக கடந்த 1994-95-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் சில நாட்கள் பயன்பாட்டில் இருந்த வந்த சுகாதார வளாகம் போதிய பராமரிப்பின்மையால், கிராம மக்கள் பயன்பாட்டை தவிர்த்து விட்டனர்.
சுகாதார வளாகம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்ததை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த ஒருவர், சுகாதார வளாகத்தை குடியிருப்பாக மாற்றியதோடு, அவ்விடத்திற்கு பட்டா கேட்டும் விண்ணப்பித்திருக்கிறாராம். இது தொடர்பாக அவ்வூர் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, பட்டா மாற்றம் செய்ய வருவாய்த் துறையினர் மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்றச் செயலாளர் முகமது அலிஜின்னாவிடம் கேட்டபோது, "ஊராட்சியில் 7 சுகாதார வளாகங்கள் உள்ளன. ஆனால் எதுவும் பயன்பாட்டில் இல்லை. சுகாதாரா வளாகத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது" என்றார்.