

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் அரியமங்கலத்தில் உள்ள டிடிட்சியா அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற டிடிட்சியா சங்கத்தினருடன் ஊரக தொழில்துறை மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச் சர் தா.மோ அன்பரசன் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘சிட் கோவில் இடம் ஒதுக்கீடு செய் யப்பட்ட பிறகு, சில நிறுவனங் களுக்கு அதற்கான பட்டா இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, ‘‘அரியமங்கலம் பால்பண்ணையிலிருந்து செல்லக்கூடிய தஞ்சாவூர் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெல் நிறுவனம் சார்ந்த தொழிற்சாலைகள் நலிவடைந்துவிட்டன. எனவே, திருச்சியை இரும்பு சார்ந்த தொழில் மண்டலத்திலிருந்து, உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில் மண்டலமாக மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச விமானநிலையம் இருப்பதால் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் உள்ளன. இத்திட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியை இத்தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிச்சயம் செய்வார். அதற்கு நானும், ஊரக தொழில்துறை அமைச்சரும் துணையாக இருப்போம்” என்றார்.
இக்கூட்டத்தில் ஊரக தொழில் துறைச் செயலாளர் அருண்ராய், ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.