திருவண்ணாமலையில் தடையை மீறி - கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தம் :
திருவண்ணாமலையில் தடையை மீறி நேற்று கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து நிறுத்தி காவல் துறை யினர் திருப்பி அனுப்பினர்.
தி.மலையில் உள்ள அண்ணா மலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு பங்குனி மாதத்தில் இருந்து கிரிவலம் செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தொடர்ந்து 17-வது மாதமாக தடை உத்தரவு நீடிக்கிறது.
ஆடி மாத பவுர்ணமியான நேற்று கிரிவலம் செல்வதற்கு தடை விதித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித் துள்ளார். இதனால், கிரிவலப் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து, கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
பொது போக்குவரத்து கடந்த 3 மாதங்களாக அனுமதிக் கப்படாமல் இருந்ததால், பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த மாத பவுர்ணமி நாளில் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களின் வருகை கணிசமாக இருந்தது. அவர்களில் பலர், கிரிவலம் செல்ல முயன்றனர்.
இதேபோல், உள்ளூர் பக்தர்களும் கிரிவலம் செல்வதில் ஆர்வம் காட்டினர். அவ்வாறு கிரிவலம் சென்றவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சில பக்தர்கள், மாற்று பாதை மற்றும் செல்வாக்கு மூலமாக கிரிவலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
