

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரத்து 514 கனஅடியாக குறைந்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 16 ஆயிரத்து 301 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 14 ஆயிரத்து 514 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று காலை 73.51 அடியாகவும், நீர் இருப்பு 35.79 டிஎம்சி-யாக இருந்தது.
காவிரியாற்றில் நீர்வரத்து சரிவு
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் வரத்து இருந்தது. நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி என்ற நிலைக்கு நீர்வரத்து சரிந்தது. இந்நிலையில், நேற்று மாலையில் இந்த அளவு மேலும் சரிந்தது. மாலை 5 மணி அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி என்ற அளவில் காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.